Wednesday, November 27, 2013


பண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா? சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல... பலனும் பல!

நகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.

தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள். வேப்பம்பூ பூக்கும் சீசனில் சேகரித்து, காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்வார்கள்.

மாதமொருமுறை வேப்பம்பூ பொரியல் செய்வார்கள். வயிற்றை வதைக்கும் பூச்சிகளை கொன்றொழித்து விடுமாம்! கடுங்காய்ச்சல் கண்டவர்களுக்கு என்றே புதருக்கு புதர் முளைத்துக் கிடக்கும் தூதுவளை. கொக்கி முள்ளால் நிறைந்திருக்கும் இதன் இலையை துவையல் அரைப்பார்கள். பொரியலும் செய்வார்கள். காயை உடைத்துப் போட்டு ரசம் வைப்பார்கள். புதர்தோறும் நெளிந்து கிடக்கும் பிரண்டையின் இளந்தண்டை ஒடித்தால் துவையல் அரைக்கலாம்.

வயிற்றுக் கோளாறு முதல் ஆண்மைக் கோளாறு வரை எல்லாவற்றுக்கும் மருந்து. நீரிழிவுகாரர்களுக்காக, வெற்றிலை கணக்கில் மரங்கள்தோறும் படர்ந்து கிடக்கும் கசப்புக்குறிஞ்சா. மாதம் ஒருமுறை இதை பொரித்துச் சாப்பிட்டால் பலன் உண்டு. குளக்கரைகளில் இதழ் விட்டு முளைத்துக் கிடக்கும் வல்லாரை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

கதிர் அறுத்த வயல்களில் முளைத்துக் கிடக்கும் சுக்கங்காய் (மிதுக்கங்காய்) பறித்து இரண்டாக வகுந்து மோரில் ஊற வைத்து காய வைக்க வேண்டும். அதைப் பொரித்தெடுத்தால் கசப்பும் துவர்ப்பும் மிக்க மிதுக்கு வற்றல். சுடுகஞ்சிக்கு அற்புத துணை! பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து... கோதுமை ஜூஸ்!

1 comment:

  1. முள்முருங்கை பூ எப்படி பயன்படுத்துவது

    ReplyDelete

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts